×

1000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற 15 வேட்பாளர்கள்: அதிர்ச்சி தகவல்கள்

 

சென்னை,: நடந்து முடிந்த தேர்தலில் 15 தொகுதிகளில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் பட்டியல் அதிர்ச்சி தருவதாக உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகிறது. திமுக அமைச்சர்கள் பலர், முன் அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளர்களிடம் தோல்வியை கண்டனர். சில தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். நாம் தமிழர் கட்சி அனைத்து இடங்களிலும் தோற்றதால், தவெக மற்றும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைகின்றன. மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சட்டசபை அமைய உள்ளது. புதிய வரவான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏராளமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், தவெக 7 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் 1000 ஓட்டு வித்தியாசத்தில் 15 வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர், என்ற புள்ளி விவரங்கள் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதன்படி, திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரிய கருப்பன், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரு ஓட்டில் தோல்வியடைந்தார். வேப்பனஹள்ளியில் திமுக வேட்பாளர் பி.எஸ்.சீனிவாசனிடம், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 138 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். கன்னியாகுமரியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திடம் திமுக வேட்பாளர் மகேஷ் 214 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். போளூரில் தவெக வேட்பாளர் அபிஷேக்கிடம், தேமுதிக வேட்பாளர் சரவணன் 227 ஓட்டில் தோல்வியடைந்தார். குளித்தலையில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரனிடம், தவெக வேட்பாளர் பால சுப்பிரமணி 233 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். திருக்கோவிலூரில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியிடம், தவெக ேவட்பாளர் பரணி பாலாஜி 285 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். பரமத்தி வேலூரில் அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர், திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தியிடம் 308 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். கும்பகோணத்தில் தவெக வேட்பாளர் வினோத்திடம், திமுக வேட்பாளர் அன்பழகன் 679 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். பழநியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனிடம், தவெக வேட்பாளர் பிரவீன் குமார் 693 ஓட்டுகளில் தோல்வியடைந்தார்.

திண்டிவனத்தில் விசிக வேட்பாளர் வன்னியரசிடம், அதிமுக வேட்பாளர் அர்ஜூனன் 734 ஓட்டுளில் தோல்வியடைந்தார். கம்பத்தில் தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவிடம், திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 751 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். கள்ளக்குறிச்சியில் தவெக வேட்பாளர் அருண் விக்‌னேஷிடம், அதிமுக வேட்பாளர் ராஜிவ்காந்தி 798 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். கோவில்பட்டியில் திமுக வேட்பாளர் கா.கருணாநிதியிடம், தவெக வேட்பாளர் 843 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளர் சிவக்குமாரிடம், தவெக வேட்பாளர் விஜய் வடிவேல் 910 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். உதகமண்டலத்தில் பாஜ வேட்பாளர் போஜராஜனிடம் தவெக வேட்பாளர் இப்ராஹிம் 979 ஓட்டுகளில் தோல்வியடைந்தார், என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Chennai ,Tamil Nadu ,DMK ,
× RELATED மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை...