திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பதால் சுவாமியை தரிசிக்க இன்று 16 மணி நேரமாகிறது. மே 1ம் தேதி வெள்ளி, தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக அமைந்ததால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தது. மேலும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் தினமும் திருப்பதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரித்ததால் தங்கும் அறைகள் பலருக்கு கிடைக்கவில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுடன் பலர் வெளியே காத்துக்கிடந்தனர். திருப்பதி முழுவதும் பக்தர்கள் நிரம்பியுள்ளனர். கடந்த 1ம்தேதி முதல் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தற்போது அதிகளவு பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். அதன்படி நேற்று 91,005 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 36,257 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை கணக்கிடும் பணி வழக்கம்போல் நேற்று நடந்தது. இதில் ரூ.3.37 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியது. இதனால் பக்தர்களால் வெளியே சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமியை 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் 7 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டும் ரத்து செய்ய தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி வரும் 6ம்தேதி முதல் நேர ஒதுக்கீடு டிக்கெட்டும் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது.

Related Stories: