ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தில் படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை(ஏப்.30) 44 பேர் படகு சுற்றுலா சென்றுள்ளனர்.
இவர்களில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ்(38), அவரது மனைவி கார்குழலி(38), அவர்களின் மகன்கள் தமிழ்வேந்தன்(5), புவிந்திரன்(10), மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூவனூரை சேர்ந்த காமராஜின் அண்ணன் மனைவி சவுபாக்கியா(42), இவரது மகள் இனியா(12), மகன் மயூரன்(8) ஆகிய 7 பேரும் அடங்குவர். பயணிகள் யாருக்கும் உயிர் காக்கும் கவச உடை தரப்படவில்லை. இந்த சூழலில் ஆற்றின் நடுவே படகு சென்று கொண்டிருந்தபோது பலத்த சூறாவளி வீசியதால் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த புவிந்திரன், மயூரன் உள்பட 28 பேர் ஏற்கனவே பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமானவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதற்காக ஆக்ராவில் இருந்து விமானம் மூலம் ராணுவத்தை சேர்ந்த 20 நீச்சல் வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து 200க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை தமிழகத்தை சேர்ந்த தமிழ்வேந்தன்(5) மற்றும் விராஜ் சோனி(6) ஆகிய இரு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. நீரில் மூழ்கி உயிரிழந்த காமராஜ் மற்றும் மயூரன் ஆகியோரது சடலங்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
