போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மாநில சுற்றுலாத் துறையால் இயக்கப்பட்டு வந்த சுமார் 20 ஆண்டுகள் பழமையான படகு, பலத்த புயல் மற்றும் காற்றின் காரணமாக அணையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின்போது படகில் இருந்தவர்களில் 28 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.
தேடுதல் பணியின் நான்காவது நாளான இன்று காலை, தமிழகத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் மயுரம் மற்றும் அவனது மாமா காம்ராஜ் ஆகிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆக்ராவிலிருந்து வரவழைக்கப்பட்ட ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, காணாமல் போனதாகக் கருதப்பட்ட 13 பேரின் உடல்களும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, பணியில் அலட்சியமாக இருந்த மூன்று ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இதுபோன்ற படகுச் சேவைகளை இயக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
