சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்

மரக்காணம்: கோடை காலம் துவங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி வெப்பம் அதிகரித்திருப்பதால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இத்தொழிலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் இப்பகுதியில் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கும். அதிலிருந்து அக்டோபர் மாதம் வரையில் உப்பு உற்பத்தி நடைபெறும்.

இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக குறைவான அளவில் வடகிழக்கு பருவமழை பெய்தது.

தற்போது மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் இப்பகுதியில் உப்பு உற்பத்தி அமோகமாக உள்ளது. அடுத்த சில தினங்களில் கத்திரி வெயில் துவங்க உள்ளதால் மேலும் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: