மாதவரம்: மாதவரம் ரவுண்டானா ஆந்திரா பஸ் நிலையம் அருகே பைக் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரேமலதா (36). இவர்களுக்கு இன்பசெல்வன் (8) என்ற ஒரு மகன் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில், மணலியில் உள்ள பிரேமலதாவின் உறவினர் வீட்டில் நேற்று சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி கேயன், பிரேமலதா, இன்பச்செல்வன் ஆகியோர் பங்கேற்றுவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டனர். மாதவரம் ரவுண்டானா ஆந்திரா பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தனர். ரவுண்டானா மாடி பேருந்து நிலைய 2வது கேட் வழியாக பேருந்து ஒன்று வந்து 200 அடி சாலை வளைவில் திரும்பியபோது, பைக்கில் வந்த கார்த்திகேயன் பேருந்தின் மீது மோதாமல் இருக்க வலது புறம் திருப்பி சாலையின் ஓரமாக செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது, இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கர்நாடகா மாநில கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியதில் நிலைதடுமாறி கார்த்திகேயன், அவரது மனைவி, மகன் ஆகியோர் சாலையில் விழுந்தனர். சுதாரித்து எழுவதற்குள் அதே லாரியின் சக்கரங்கள் அடுத்தடுத்து 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில், தலை, முகம், உடல் முழுவதும் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இந்த காட்சியை பார்த்து கண்கலங்கினர். பின்னால் வந்த வாகனங்களை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தெரிவித்ததின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காஞ்சிபுரத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் அன்பரசு (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணி நடைபெற்று வருவதால் கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆந்திரா பேருந்து நிலையத்திலிருந்து வரக்கூடிய பேருந்துகள், மாதவரம் சிஎம்டிஏவில் இருந்து வரக்கூடிய லாரிகள் என கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த சாலையில் சென்று வருவதால் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை பராமரித்தாலும் இருசக்கர வாகன விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, மாதவரம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
