பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் மலைப் பகுதியில் அதிகளவில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இங்கு வறட்சியால் தண்ணீர், இரை தேடி மான்கள் கிராமங்களுக்கு வருவது வழக்கம். இன்று காலை தண்ணீர் தேடி மான் ஒன்று, நாட்டார்மங்கலம் வயல் பகுதிக்கு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முத்துசாமி மகன் முருகுபாண்டியன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் பெரம்பலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனக்காப்பாளர் மணிகண்டன், வனக்காவலர் திலகவதி ஆகியோர் விரைந்து வந்து இறந்த மான் உடலை மீட்டு செட்டிகுளம் கால்நடை மருந்தகத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் இறந்தது 2 வயதுடைய பெண் மான் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து மானின் உடலை வனத்துறையினர் காப்பு காட்டில் கொண்டு சென்று புதைத்தனர். மான் கிணற்றில் உயிரிழந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பரிதாபத்துடன் பார்த்து சென்றனர்.
