நீட் தேர்வில் ஆள்மாறாட்டங்களை தடுக்க மருத்துவ மாணவர்களுக்கு ஞாயிறு விடுமுறை இல்லை: அதிரடி நடவடிக்கை

சென்னை: இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெறும் நிலையில் ஆள்மாறாட்டங்களை தடுக்க மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை இல்லை என அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் வடமாநிலங்களில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. குறிப்பாக, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிலாக தற்போது மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் அல்லது படித்து முடித்தவர்கள் சட்டவிரோதமாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகைய ஆள்மாறாட்டங்களை தடுப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம், நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அந்தந்த வகுப்பறைகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நடக்கும் நாட்களில் மருத்துவ மாணவர்கள் விடுப்பில் செல்லாமல் கல்லூரியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், மிகமுக்கியமான காரணங்களுக்கு மட்டுமே மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கவேண்டும் என்றும் கல்லூரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறை தேர்வு மையங்களில் செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்படும் வினாத்தாள்களையும் பயன்படுத்த உள்ளனர். தேர்வின்போது விண்ணப்பதாரர்களை உறுதிப்படுத்தவும் ஆள்மாறாட்டத்தை தடுக்கவும் என்.டி.ஏ.கைரேகை ஸ்கேனிங் மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பும் செய்யப்பட உள்ளது. நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைகளை தொடர்ந்து தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர்கள், டிஜிட்டல் ஸ்கேனிங் மற்றும் நேரடி சோதனைகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் வழக்கமான சி.சி.டி.வி. கேமராக்களுக்கு பதிலாக, ஏ.ஐ. இயக்கும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தேர்வு அறையில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான அசைவுகள், மாணவர்களின் தேவையற்ற பேச்சு மற்றும் பிற முறைகேடுகளை உடனுக்குடன் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை அனுப்பும்.

* மின்னணு மோசடிகளை தடுக்க…
மின்னணு தொடர்பு மூலம் நடைபெறும் மோசடியைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவுகளை தடுப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கண்காணிப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளது. முறைகேடு கண்டறியப்பட்டால் தேசிய தேர்வு முகமை நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்பதில் இருந்து நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: