வர்த்தக சிலிண்டர் விலை கடும் உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: வர்த்தக சிலிண்டர் விலை கடும் உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள் என்று ஒன்றிய அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை நேற்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டு ரூ.3 ஆயிரத்து 237க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்களை நடத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விலை உயர்வு என்பது இயங்கி வரும் ஓட்டல்களும் முழுமையாக மூடும் நிலைக்கு தள்ளப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விலை உயர்வு நுகர்வோருக்கு (வாடிக்கையாளர்கள்) நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வர்த்தக சிலிண்டர் உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வர்த்தக சிலிண்டர் உயர்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள். தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எல்பிஜி விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பாஜ அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. இந்த எல்பிஜி விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: