×

ஆலந்தூர், கண்ணன் காலனியில் லாரி இழுத்து சென்றதில் 4 மின்கம்பங்கள் சேதம்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர், கண்ணன் காலனியில் விமானநிலைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர்களுக்காக உயர் அழுத்த மின்திறன் கொண்ட மின்பகிர்மான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையத்தில் பொருத்துவதற்காக நேற்று உயர் அழுத்த மின்மாற்றி இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. இந்த லாரி ஆலந்தூர், கண்ணன் காலனி, நோபிள் தெரு வழியாக வந்தபோது, அந்த கன்டெய்னர் லாரியில் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் சிக்கி, மின்கம்பிகளுடன் இழுத்து சென்றது. இதில் அப்பகுதியில் இருந்த மேலும் 3 மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்தன.

அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் இழுத்து செல்லப்பட்டதில், அனைத்து மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததில் பலத்த தீப்பொறிகளுடன் மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி திமுக கவுன்சிலர் சாலமோன், அப்பகுதி மின் பகிர்மான அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியர்களுடன் விரைந்து வந்தனர்.

சம்பவ இடத்தில் சேதமான 4 மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை இணைக்கும் பணிகளில் அப்பகுதி மக்களின் உதவியுடன் ஈடுபட்டனர். கண்ணன் காலனிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இன்று காலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுமார் தெரிவித்தார். அதன்படி, இன்று காலை கண்ணன் காலனி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்காக அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Alandur, Kannan Colony ,Alandur ,Alandur, Kannan Colony, Chennai ,
× RELATED சித்ரா பெளர்ணமியை ஒட்டி...