திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. திருநங்கைகளின் பிரத்யேக கோயிலான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 3ம் தேதி கரக ஊர்வலத்துடன் தொடங்கியது. தினமும் மகாபாரதம் சொற்பொழிவு, பாஞ்சாலி திருமணம், வாணவேடிக்கை, கரகாட்டம், கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று திருநங்கைகளுக்கான பெண் அழைப்பு, தாலி கட்டுதல் நடந்தது.
இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதைதொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி, மேல்மலையனூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். விதவிதமாக உடை அணிந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதில் மிஸ் வேடந்தவாடி 2026ம் ஆண்டிற்கான முதல் பரிசை சென்னையை சேர்ந்த திருநங்கை லத்திகா, 2ம் பரிசை புதுச்சேரியை சேர்ந்த பவ்யா, 3ம் பரிசை சென்னையை சேர்ந்த சாய்ஸ்ரீ ஆகியோர் வென்றனர். அவர்களுக்கு மிஸ் வேடந்தவாடி குழுக்கள் சார்பில் கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கூத்தாண்டவர் தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலை நடை திறக்கப்பட்டு கூத்தாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கூத்தாண்டவர் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்ைககள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அரவான் களப்பலி நிகழ்ச்சி, திருநங்கைகள் தாலி அறுத்து, வளையல் உடைத்து விதவைக்கோலம் பூண்டு சோகத்துடன் தங்கள் ஊருக்கு திரும்புவார்கள்.
