போதிய மழையின்மை, வாட்டி வதைக்கும் வெயிலால் குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள்

*தீவனங்கள் கிடைக்காமல் பாதிக்கப்படும் கால்நடைகள்

உடன்குடி : உடன்குடி பகுதியில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. தீவனங்கள் கிடைக்காததால் ஆடு, மாடுகளை நீண்டதூரத்துக்கு ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி பகுதிகளில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர்.

மேலும் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் செய்வோர் அதிகம் உள்ளனர். இதில் தோட்டங்கள் உள்ளே பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை தவிர அதிகமான ஆடு, மாடு வளர்ப்போர் அருகில் உள்ள காட்டுப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் அல்லது காடுகளில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு பரவலாக மழை பொழிந்தாலும் மழைநீரை சேமித்து வைக்க வாய்ப்பில்லாததால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதுடன் கால்நடை தீவனங்களும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் காட்டுத் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வீடுகளிலோ, பண்ணைகளிலோ வளர்க்கும் ஆடு, மாடுகளை வளர்க்கும் போது அதிகமான தீவனச் செலவுகளை குறைப்பதற்கு மேய்ச்சல் நிலங்களையே நம்பி உள்ளனர்.

மேலும் போதிய மழையின்மை மற்றும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே வரும் காலங்களில் மழைநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலத்தடி நீர் மேம்படுவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும் என கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: