வலங்கைமான்,ஏப்.29: வலங்கைமான் பேரூராட்சி 1வது வார்டு பகுதியில் சந்தன வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள குழாய் மதகு பழுதடைந்த நிலையில் அப்பகுதியில் புதிய மதகு கட்டி தர பேரூராட்சி உறுப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு லாயம் பகுதியில் வலங்கைமான் பாபநாசம் சாலையின் தெற்கே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இவர்கள் சந்தன வாய்க்காலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட குழாய் மதகினை கடந்து செல்ல வேண்டி சூழல் உள்ளது. குழாய் மதகு தற்போது பழுதடைந்தும் அகலம் குறைவாகவும் உள்ளதால் கட்டுமான பணி உள்ளிட்டவைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு வாகனங்கள் மிகவும் சிரமம் அடைகிறது.
மேலும் சந்தன வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் விட்டம் குறைவாக உள்ளதால் அவ்வப்போது குப்பைகள் தேங்கி பாசனத்திற்கு தண்ணீர் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இக்குறைகளை கலையும் பொருட்டு பழுதடைந்த குழாய் மதகினை எடுத்து விட்டு புதிய சிறு பாலம் கட்டி தர வேண்டுமென பேரூராட்சி வார்டு உறுப்பினர் செல்வமணி மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
