திருவாரூர், ஏப். 29: திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே இந்த பருத்தி சாகுபடி நடைபெற்று வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த பருத்தி பயிருக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் சாகுபடி பரப்பளவு 2 மடங்காக அதிகரித்து 40 ஆயிரம் ஏக்கரில் கடந்த 4 ஆண்டுகளாக சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் துவக்கத்திரல் சம்பா அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் அதன் பின்னர் இந்த பருத்தி விதையினை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளார்கள் மும்முரமாக ஈடுப்பட்டதையடுத்து 40 ஆயிரம் ஏக்கரில் இந்த பருத்தி பயிர் சாகுபடி நடைபெற்றுள்ளது.
