கள்ளிக்குடி அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலை

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே திமுக பிரமுகர் நள்ளிரவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே சோளம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சீனிவாசன்(28). திமுக பிரமுகரான இவர், நேற்று முன்தினம் இரவு டூவீலரில் கள்ளிக்குடி சென்றார். அப்போது வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள், அவரை பின்தொடர்ந்து வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், டூவீலரை கீழே போட்டுவிட்டு, தப்பியோடினார். தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டபடியை ஓடிய இவரை, மர்ம நபர்கள் விரட்டிச்சென்று சோளம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தத்தால் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்த பொதுமக்கள், சீனிவாசன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சில தினங்களுக்கு முன் சோளம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நடந்துள்ளது. இதில் கரகம் கரைக்கும் இடத்தில் இதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், நண்பர்களுடன் மது அருந்தியதை சீனிவாசன் கண்டித்துள்ளார். இந்த முன்விரோத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கால் பவுன் நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை
கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த சாலப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி தாயாரம்மாள் (79). கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்த தாயாரம்மாள், நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் சந்தேகமடைந்து அருகில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு துணியால் கைகள், கால்கள் மற்றும் முகம் ஆகியவை கட்டப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வெள்ளியணை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மூதாட்டி அணிந்திருந்த முக்கால் பவுன் தோடு மற்றும் மூக்குத்தி மாயமானதும், வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் தாயாரம்மாளின் கை, கால்களை கட்டியதோடு, சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க வாயில் துணியை அமுக்கி கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: