டெல்லி: ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி முன் சிபிஐ மேல்முறையீட்டை வழக்கில் ஆஜராக போவதில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடிய ஆகியோரை டெல்லி நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் விடுவித்தது. இதனையடுத்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஸ்வரண காந்தா சர்மாவு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்வரண காந்தாவின் பிள்ளைகள் ஒன்றிய அரசு வழக்கறிஞர்களாக உள்ளதால் ஒன்றிய அரசுக்கு சாதகமாக நீதிபதி செயல்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வரண காந்தா சர்மாவை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஸ்வரண காந்தா வழக்கு விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ள கெஜ்ரிவால் நீதிபதி ஸ்வரணகாந்தாவிடம் இருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக தர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது மனசாட்சிக்கு செவிசாய்த்து, காந்திஜியின் கொள்கைகளைக் கடைப்பிடித்து, சத்யாகிரக உணர்வுடன், நீதிபதி ஸ்வரண காந்தா முன் நான் ஆஜராகப்போவதில்லை என்றும் இவ்விதவாதங்களும் முன் வைக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் நேரடியாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராவதால் அர்த்தமுள்ள எந்த வளைவுகளும் ஏற்படாது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதி ஸ்வரணகாந்தாவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
