உலகளவில் தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை சட்டென்று பணிநீக்கம் செய்து ஆட்குறைப்பு நடவடிக்கை கையாண்டு வரும் சூழலில் அந்த வரிசையில் தற்போது இந்திய ரயில்வே துறையும் சேர்ந்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 2% பேரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரயில்வே வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக புதிய கவலைகளையும் இந்த தகவல் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அதிக பணியாளர்களை கொண்ட துறையாக திகழ்கிறது இந்திய ரயில்வே துறை. குறைந்த செலவில் பாதுகாப்பு பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக, மக்களிடம் ரயில்வே போக்குவரத்து நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது.
இந்தியாவின் மூலைமுடுக்கு வரை ரயில்களின் தண்டவாளங்களிலும், ரயில்களும், ரயில்வே ஊழியர்களும் தடம் பதித்துள்ளன. சுமார் 14.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வரும் நிலையில் 2% பணியாளர்களை சுமார் 30,000 பேரை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் சுமார் 30,000 மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு மண்டல ரயில்வேயில் மட்டும் 1900-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதாகவும் சென்னை பகுதியில் உள்ள முக்கிய ரயில்பெட்டி தயாரிப்பு நிலையத்திலும் பல பணியிடங்கள் குறைக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறபடுகிறது. இதனால் அந்த மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது.
அதே சமயம் நாட்டில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இரட்டை பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், புதிய நவீன ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு சேவையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி பார்த்தால் தற்போது அதிக பணிகள் காரணமாக கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் தவிர பணியாளர்களை குறைப்பது சரியான முடிவாக இருக்காது என ரயில்வே ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் செயலாகவே இந்த ஆட்குறைப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக, ரயில்பாதைகள் பராமரிப்பு, சிக்னல் கண்காணிப்பு, ரயில்களின் பராமரிப்பு போன்ற முக்கிய பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பணிச்சுமை அதிகரிப்பதால் தவறுகள் நிகழும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறபடுகிறது.
இதனால் ரயில்வே மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையும் பிரதான போக்குவரத்தாக திகழும் ரயில் சேவை மக்கள் நிராகரிக்கவும், பயணிகள் உயிர் பாதுகாப்பு கேள்வி குறியாக வாய்ப்பு இருப்பதாகவும் ஊழியர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
ரயில்வே நிர்வாகம் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற முடிவுகளை எடுத்தாலும், இந்த முடிவு ரயில்வே சேவையின் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக ஆட்குறைப்பு என்ற பெயரில் கடை நிலை மற்றும் இடை நிலை ஊழியர்கள் பெரியளவில் நீக்கப்படுவார் என்று பெரும் குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது
