மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் குற்றங்கள், சமூக விரோத செயல்களை தடுக்க சோதனை

*போலீசார் அதிரடி

சித்தூர் : சித்தூர் மாவட்ட கூடுதல் எஸ்பி ராஜசேகர் ராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சித்தூர் எஸ்பி துஷார் துடி உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் கிராமங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டு, குற்றங்கள் மற்றும் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் விரிவான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், சந்தேகத்திற்கிடமான நபர்களைச் சோதித்தல், வாகனங்களைப் சோதனை செய்தல், குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகளின் முக்கிய நோக்கம், குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதும், மக்களிடையே பாதுகாப்புச் சூழலை வலுப்படுத்துவதும் ஆகும். எனவே தங்கள் சுற்றுவட்டாரத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது வாகனங்களையோ கண்டால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். அதேபோல், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாக காவல்துறையின் உதவியை நாடலாம்.

அதேபோல் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதற்காக, தலைக்கவசம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம் என காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

சாலைப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு, ஒரு சிறிய அலட்சியம் கூட உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். எனவே சாலை பாதுகாப்பு களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: