வாட்டி வதைக்கும் வெயில் வாகன ஓட்டிகள் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், முக்கிய சாலைகளின் சிக்னல்களில் மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் வெப்பம் மிக அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், குளிர்ந்த நீராகாரங்களை உட்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். சென்னை மாநகரில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு சிக்னல்களில் நின்று செல்லும்போதும் அங்கு நிழல் இல்லாத காரணத்தால் சூட்டில் தவிப்பது தொடர்கதையாகி வருகிறது.

எனவே போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள சிக்னல்களில் கடந்த 2024ம் அண்டு முதல் பசுமை பந்தல்கள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, பச்சை நிற பசுமை துணியினாலான பந்தலானது சென்னை முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய டிராபிக் சிக்னல்களில் அமைக்கப்பட்டது. இந்த பந்தல், சிக்னல்களில் நிற்கும் சமயங்களில் வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்திலிருத்து காத்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் 8 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சென்னை முழுவதிலும் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வரும் மே 4ம் தேதி தமிழ்நாட்டில் கத்திரி வெயிலில் தாக்கம் தொடங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பாக பசுமை பந்தல்களை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வடக்கு உஸ்மான் சாலை, பின்னி சாலை சந்திப்பு, அடையாறு சந்திப்பு, மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை எதிரே உள்ள ஈவெரா பெரியார் சாலை, அண்ணா நகர் 3வது அவென்யூ, எண்ணூர் நெடுஞ்சாலை, மூலக்கடை சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் சாலை, ஈவிகே சம்பத் சாலை சந்திப்பு, வள்ளுவர் கோட்டம் சிக்னல், ஏஜிஎஸ் – ஜிஎஸ்டி சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை பசுமை பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பசுமை பந்தல்களின் அகலமானது டிராபிக் சிக்னல்கள் அமைந்துள்ள சாலைகளின் அளவை பொறுத்து மாறுபடுகிறது. அதே சமயம், நீளத்தை பொறுத்தவரை தோராயமாக 20 முதல் 30 அடி நீளத்தில் அமைக்கப்படுகிறது.

சில பெரிய மற்றும் முக்கிய சிக்னல்களில் நீளம் 40 அடிக்கும் மேல் அமைக்கப்படுகிறது. இந்த பசுமை பந்தலானது அதிகமான உயரத்தில் அமைக்கப்படுவதால், காற்றின் வேகம் காரணமாக கடந்த காலங்களில் பந்தல்கள் கிழியும் நிலை ஏற்பட்டது.இதனால் இந்த முறை பசுமை பந்தல்கள் கிழியாதவாறு உயரங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டிகள் கூறுகையில், “சென்னையில் வெயில் சுட்டெரித்து வருவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், சிக்னல்களில் சிரமத்துடன் காத்திக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் நலன் கருதி, சிக்னல்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பந்தல்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சற்று உதவியாக இருக்கிறது,” என்றார்.

Related Stories: