5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: வரும் 29ம் தேதி சென்னை திரும்புகிறார்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானல் புறப்பட்டு சென்றார். இதற்காக தனி விமானத்தில் மதுரை சென்றார். ஓய்வை முடித்துவிட்டு வரும் 29ம் தேதி மதியம் தனி விமானத்தில் சென்னைக்கு திரும்புகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, 5 நாட்கள் ஓய்வுக்காக, நேற்று காலை 10.15 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் மலைவாச ஸ்தலம் செல்கிறார். கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கியிருந்து, ஓய்வு எடுத்தபடி, அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளித்து பொழுதுபோக்குகிறார்.

அதன் பின்பு வரும் 29ம் தேதி, (புதன்கிழமை) காலை கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு, காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரையில் இருந்து, தனி விமானத்தில் புறப்படும் மு.க.ஸ்டாலின் பகல் 12 மணி அளவில், சென்னைக்கு திரும்பி வருகிறார். முதல்வரின் இந்த பயணத்தின் போது, அவருடைய குடும்பத்தினரும் உடன் சென்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு, சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக இதேபோல் 5 நாட்கள் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்பி வந்தார். அதேபோல், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, கொடைக்கானல் மலைவாசஸ்தலம் சென்று ஓய்வு எடுத்துவிட்டு, சென்னை திரும்பி வந்தார். அதுபோல் இப்போது மூன்றாவது முறையாக, தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, 5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: