சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலிருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பல இடங்களில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டனர்.

வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் காலையிலேயே வாக்கு செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தான் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 235 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றுவதைப் பார்வையிட்டார். மேலும், வாக்குப்பதிவில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்பது குறித்து முகவர்களிடம் கேட்டறிந்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா, தேர்தல் அதிகாரிகளின் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: