சமூக ஊடகத்தில் போட்ட பதிவால் சர்ச்சை; பாஜக நிர்வாகியின் செயலால் ஐகோர்ட் நீதிபதி விலகல்: ராகுலின் குடியுரிமை வழக்கில் திருப்பம்

லக்னோ: ராகுல் காந்தியின் குடியுரிமை வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த பாஜக நிர்வாகியால் நீதிபதி விசாரணையில் இருந்து விலகினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக கூறி, அவருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் எஸ்.விக்னேஷ் சிஷிர் என்பவர் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த கீழ் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை கடந்த 17ம் தேதி விசாரித்த நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, வழக்கமான சட்ட நடைமுறைகளை பின்பற்றி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய பாஜக அரசைச் சேர்ந்த மனுதாரர் விக்னேஷ் சிஷிர், சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டது வெளிச்சத்திற்கு வந்தது. ‘காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவு நேரங்களில் நீதிபதிகளுக்கு போன் செய்து அழுத்தம் கொடுக்கின்றனர்’ என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் பதிவிட்டிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, ‘மனுதாரர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதோடு, அவதூறு பரப்பும் வகையில் செயல்படுகிறார்.

இதுபோன்ற சூழலில் இந்த வழக்கை தொடர்ந்து நான் விசாரிக்க விரும்பவில்லை’ என்று கூறி விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், துணை சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதையும் குறிப்பிட்ட நீதிபதி, புதிய அமர்வை நியமிக்க தலைமை நீதிபதிக்கு கோப்புகளை அனுப்ப உத்தரவிட்டார். ஒன்றிய பாஜக நிர்வாகியின் இத்தகைய தரம் தாழ்ந்த செயலால் நீதித்துறைக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: