75,000 பிஎல்ஏக்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல் எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சிக்கலாம்: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

 

சென்னை, ஏப்.21: முதல்முறையாக நவீன தொழில்நுட்பம் மூலம் 75,000 பிஎல்ஏ2க்களுடன் ஒரே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உரையாடினார். அப்போது எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் (பிஎல்ஏ2 ) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உரையாடி ஆலோசனைகளை வழங்கினார். கால் பிரிட்ஜிங் நவீன தொழில்நுட்ப முறையில் ஒரே நேரத்தில் 75000 பிஎல்ஏ2க்களுடனும் அலைபேசி வாயிலாக நேரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட இந்த இரண்டு நாட்கள் முழு மூச்சுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றும் படி கூறினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஒன்றிய பாஜ அரசு நாடாளுமன்றத்தில் ‘கருப்புச் சட்டமான டி-லிமிட்டேஷன் பில்லைக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை முடக்கி, நம் மக்களை நம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக்க முயன்ற சதியை நாம் போராடி வென்றோம். ஆனால் அவர்கள் இதோடு நிறுத்த மாட்டார்கள். டி-லிமிட்டேஷன் பில்லில் நாம் பெற்ற வெற்றி வெறும் டிரெய்லர்தான். இன்னும் பல போர்கள் நமக்கு முன்னால் இருக்கின்றன. மக்களுக்கு இதை தொடர்ந்து உணர்த்த வேண்டும். நாம் கட்டியெழுப்பிய இடஒதுக்கீடு, தமிழர் உரிமைகள், பெண்களின் உயர்வு, சிறுபான்மையினரின் கண்ணியம் என எல்லாவற்றையும் பின்னோக்கி இழுக்கத் துடிக்கின்ற அவர்களுக்கு எதிராக நாம் வலிமையோடு போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு பலவீனமான ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது தான் நம் மாநிலத்தைப் பலவீனப்படுத்தி, டெல்லியிலிருந்து நம்மை ஆட்டிப்படைக்க முடியும் என திட்டம் தீட்டுகின்றனர். அந்தச் சதித் திட்டத்தை வீழ்த்த நம்மால்தான் முடியும். நம் கூட்டணியால் தான் தமிழ்நாட்டை தகர்க்க வரும் டெல்லி அணியை தடுத்து நிறுத்த முடியும். சட்டமன்றத்தில் நாம் வலுவாக இருக்கும் வரை டெல்லியால் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தொட முடியாது. ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் இந்த இரண்டு நாட்கள் அவரவர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு கேட்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நாளில் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்று கூட விடுபட்டு விடக் கூடாது.

வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய முக்கிய ஏற்பாடுகளை பற்றி விளக்கியவர் “தன்னார்வலர் தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாகன வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவரவர் பகுதியில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களை நேரில் சென்று அழைத்து வர ஏற்பாடுகள் செய்வது அந்தந்தந்த வாக்குச்சாவடி முகவர்களது பொறுப்பு. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம். எந்தவித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு (08069446900) அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில், வாக்குப்பதிவு தொடங்கி கடைசி வாக்கு பதிவாகும் வரை வாக்குச்சாவடியிலேயே வாக்குச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பதிவான வாக்குகளை உறுதிப்படுத்தி, வார் ரூம்க்கு தகவலை தெரிவித்து, பார்ம் 17ஐ சேகரித்த பிறகு தான் ஒவ்வொருவரும் ஓய்வெடுக்க வேண்டும்.

முடிவுகள் வரும்போது ஒவ்வொரு தொகுதியாக-வாக்குச்சாவடி வாரியாக நாம் பெற்ற வாக்குகளை அலசி ஆராய்வேன். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்த வாக்குச்சாவடி முகவரை நானே நேரில் சந்திப்பேன். ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களால் மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு அலையே வீசுகிறது. நமது சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. மக்கள் மனநிலையும், களநிலையும் நம் வெற்றியை உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு அடுத்த மாதம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: