நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மதமற்றவர் சான்றிதழ்: ஒரு வாரத்தில் வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி-மதமற்றவர்’ என்று ஒரு வாரத்தில் சான்று வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1958ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பிறந்த எனக்கு பிறப்பு சான்று இல்லை. பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின்பு சான்றுகளை பெறவில்லை. எனது ஜாதி, மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்றுகளோ என்னிடம் இல்லை. ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ ஜாதி-மதமற்றவர் என்று சான்று கோரி வேளச்சேரி தாசில்தாரருக்கு விண்ணப்பித்தேன்.

அந்த விண்ணப்பம் சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் காரணமாக எனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எனது விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி மதமற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: