பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் விஜய் ரூ.100 கோடி சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: ஐகோர்ட் கருத்து; ஐடி பதிலளிக்க உத்தரவு

சென்னை: இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய் ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியது உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமமாகும்.

எனவே, விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்று விசாரிக்குமாறு வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை குறைத்து காட்டியது முறைகேடானது. இது தேர்தல் விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: