இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

 

சென்னை: இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23ம் தேதி (நாளை மறுதினம்) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:

(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. எஸ்எம்எஸ் மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

(3) பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்க செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

(4) தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

(5) கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

(7) சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்தலாம். தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.

(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை கூட்ட அனுமதி கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: