திருவள்ளூர், ஏப்.21: தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், ஆவடி, பூவிருந்வமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவாகும் வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க 2 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் வாக்குப்பதிவை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் தலைமையில் 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கேமரா, கண்காணிப்பு, ஜிபிஎஸ் சிவிஜில் குழு மற்றும் எம்சிஎம்சி குழு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். மேலும் அவர் திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்களும், பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மு.பிரதாப் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அதில், செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் பயிலக வாக்கு எண்ணும் மையத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது. இங்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வளாகம் பாதுகாப்பு சுற்றுச்சுவருடன் அறைகள் உள்ளனவா என்பதையும் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணும் அறைகளில் கம்பி வலை மற்றும் தடுப்புகள் அமைத்தல் பணிகளையும் பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், பாதுகாப்பு அறையின் நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அனைத்து பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தார். அதேபோல், வாக்கு எண்ணும் நாளில் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் வருவதற்கான வழி அமைக்க பாதுகாப்பு தடுப்புகள், வாகனங்கள் நிறுத்துமிடங்களையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவைகளை விரைவில் முடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
அப்போது, துணை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தனலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டி.ஸ்ரீ ராம், நில அளவை உதவி இயக்குநர் பேச்சியப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை (கிழக்கு) பஞ்சு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ஸ்ரீதர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
