கேமராக்கள் முன் பணம் வாங்க மறுத்து வாக்காளர்களை திசை திருப்ப ‘காரப்பொரி’ ருசித்த மோடி: மகளிர் இடஒதுக்கீடு குறித்து மம்தா பதிலடி

 

கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட ஒன்றிய பாஜக அரசு மும்முரம் காட்டி வரும் நிலையில், பிரதமர் மோடியின் பிரசாரம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடக்கவுள்ள நிலையில், பாஜவை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி நேற்று புருலியா, ஜார்கிராம், மெடினிபூர் மற்றும் விஷ்ணுபூர் ஆகிய நான்கு இடங்களில் தொடர் பிரசாரம் மேற்கொண்டார். ஜார்கிராமில் பிரசாரம் செய்த போது, திடீரென சாலையோர கடை ஒன்றில் காரப்பொரி (ஜல்முரி) வாங்கிச் சாப்பிட்டு மோடி மக்களை கவர்ந்தார்.

கடைக்காரர் பணம் வாங்க மறுத்த போதிலும், கேமராக்கள் முன்பாக வற்புறுத்தி பணத்தை கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டார். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அதிருப்தியில் உள்ள வாக்காளர்களை திசைதிருப்பவே, ஜல்முரி சாப்பிடுவது போன்ற எளிய மனிதர் வேடத்தை பிரதமர் போடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை திரிணாமுல் காங்கிரஸ் தடுத்ததாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

வங்காளத்தின் மகள்கள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆவதை முதல்வர் மம்தா பானர்ஜி விரும்புவதில்லை என்றும், பழங்குடியின பிரதிநிதித்துவத்தை பாஜ தான் உறுதி செய்ததாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இந்தியாவிலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தான் அதிகப்படியான பெண் பிரதிநிதிகள் உள்ளனர்; மக்களவையில் 37.9 சதவீதம் மற்றும் மாநிலங்களவையில் 46 சதவீதம் பெண் உறுப்பினர்களை தனது கட்சிதான் நியமித்துள்ளது’ என்று ஒன்றிய பாஜக அரசின் பொய் பிரசாரத்தை புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத ஒன்றிய அரசு, தேர்தல் சமயத்தில் மட்டும் இதுபோன்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: