சென்னை: தமிழக உளவுத்துறை ஐ.ஜி. இடமாற்றத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அவினாஷ் குமார் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த 19ம் தேதி உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த செந்தில் வேலனை மாற்றிவிட்டு, அவினாஷ் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
செந்தில் வேலன் மீது எந்தப் புகாரும் இல்லாத நிலையில், எந்தவிதமான முகாந்திரமும் இன்றி இந்தத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324-ன் படி, தேர்தலை நடத்துவது மற்றும் அது தொடர்பான பணிகளைக் கண்காணிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அதிகாரம். உளவுத்துறை ஐ.ஜி-யின் பணிக்கும் தேர்தல் நடத்தும் முறைக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களில் தேர்தல் ஆணையம் தேவையற்ற முறையில் தலையிடுவதாக திமுக கருதுகிறது. உளவுத்துறை ஐ.ஜி என்பது சட்டம் ஒழுங்கு, முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போன்ற மிக முக்கியமான பணிகளைக் கவனிப்பதாகும்.
தற்போது முக்கிய மற்றும் உணர்வுப்பூர்வமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இந்த இடமாற்றம் மாநிலத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும். புதிய அதிகாரி இந்தப் பணிகளைப் புரிந்துகொள்ளக் கூடுதல் காலம் எடுக்கும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அவினாஷ் குமாரின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இதனால், இந்த நியமனத்தில் அரசியல் தலையீடும், பாரபட்சமாகச் செயல்படும் வாய்ப்பும் இருப்பதாகத் திமுக கருதுகிறது.
எனவே, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், கடந்த 19ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று டி.ஆர்.பாலு தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கடிதம் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஐ.ஜி இடமாற்ற விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
