கடற்கரையில் தேக்கமடையும் குப்பைகள்

*சுற்றுலா பயணிகள் முகம்சுழிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் சுற்றுலாவில் சிறந்து விளங்குவதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சிறந்த சுற்றுலா தலத்தில் புதுவை கடற்கரை உள்ளதால் சுற்றுலா பயணிகள் முதலில் கடற்கரையை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

இதனால் கடற்கரை சாலையை எப்போதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குப்பைகளை கீழே போடாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புதுவை நகர பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சரிவர பணிகளை செய்யாததால் ஆங்காங்கே குப்பைகள் தேக்கம் அடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில் நேற்று கடற்கரை சாலை தலைமை செயலகம் அருகே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடத்தில் குப்பைகள் தேக்கமடைந்து குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை குப்பை வாரும் நிறுவனம் கண்டுகொள்ளாததால் சுற்றுலா பயணிகள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை புதுவையின் அழகை சீர்குலைப்பதோடு, சுற்றுலா பயணிகள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை உண்டாக்குகிறது. ஆகையால் உள்ளாட்சி துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கடற்கரை சாலையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: