தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால் இயற்கை உரம் பயன்பாடு அதிகரிப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு மண் புழு உரம் மற்றும் தொழு உரம் பயன்பாடு விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

தேவதானப்பட்டி பகுதியில், மேல்மங்கலம், ஜெயமங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி ஆகிய பகுதியில் பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

இதே போல் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் மஞ்சளாறு அணை ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில், அதற்ஏற்ப பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆற்றுப்பாசனம் மற்றும் அணை பாசனம் மூலம் நன்செய் நிலங்களில் நெல்சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. புன்செய் நிலங்களில் கிணற்றுப்பாசனம் மூலம் பருத்தி, மக்காச்சோளம், வாழை, முருங்கை, கரும்பு, வெண்டை, தக்காளி, சாம்பார் பூசணி, கத்தரி, பீட்ரூட், காளிபிளவர், கொத்தமல்லி, முருங்கை பீன்ஸ், மற்றும் பூ வகைகளான சம்பங்கி, ரோஜா, செண்டு பூ, செவ்வந்தி உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, மானாவாரி சோளம், கம்பு, தட்டைபயறு, பாசிப்பயறு, மொச்சை, எள், கல்லுப்பயறு, கானம், இறுங்குசோளம், நாட்டுசோளம், உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் சாகுபடியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து வேளாண்மைத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் ரசாயன உரப்பயன்பாட்டால் மண்ணின் தன்மை கெடுவது, காற்று மாசுபாடு, தண்ணீர் மாசுபாடு போன்றவற்றை குறித்து தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் ரசாயன உரம் மற்றும் ரசாயன மருந்துகளின் விலை என்பது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுச்செல்கிறது.

அதனால் பயிர் சாகுபடியில் ரசாயன பயன்பாடு இல்லாமல் பயிர்சாகுபடி செய்யமுடியாத நிலை இருந்தது. அந்த நிலைமை தற்போது மெல்லமெல்ல குறைய தொடங்கியுள்ளது. விவசாயிகள் தற்போது விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமர்த்துதல், மாட்டுக்கிடை அமர்த்துதல் செய்து வருகின்றனர்.

மேலும் கரும்பு, வாழை, பருத்தி, காய்கறி பயிர்களுக்கு மாட்டு தொழு உரம் போட்டு நன்கு உழவு செய்து பின்னர் சாகுபடியினை தொடங்குகின்றனர். சாகுபடி பயிர்கள் பூ பூக்கும் பருவத்தில் மண் புழு உரங்களை அதிகளவு வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் விளைநிலங்களில் உள்ள மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. அந்த பகுதியில் காற்று மாசுபடும் நிலை குறைந்து வருகிறது. மண்புழு உரமிடுதலால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்புழு உரம், மாட்டு தொழு உரமிடுதல் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சாகுபடி பயிர்களுக்கு பூச்சி தாக்குதல், பயிர் போதிய வளர்ச்சி இல்லாமை, குறைந்தளவு பூ பூத்தல், குறைந்தளவு மகசூல் உள்ளிட்டவைகளால் விவசாயிகள் அதிகளவு செலவு செய்து, ரசாயன மருந்துகளை தெளிக்கின்றனர். மேலும் அதிக செலவு செய்து ரசாயன மருந்து தெளித்து குறைந்தளவு மகசூலை எடுப்பதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது விவசாயிகள் சாகுபடி பயிர்களுக்கு பஞ்சகாவ்யம் மருந்துகளை பயிர்களுக்கு அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் தற்போது மண்புழு உரம், பஞ்சகாவ்யம் மருந்து தெளிப்பு என படிப்படியாக விவசாயிகள் மாறிவருகின்றனர்.

Related Stories: