சேலம், ஏப்.20: கோடை காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயற்சி பாதிப்பை தடுக்க வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டுமென கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 96 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மதிய நேரத்தில் அனல்காற்று வீசி வருவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயற்சி உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
