சேலம், ஏப்.18: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவ-மாணவிகளின் கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்குகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளுக்கு இலவச கோடைக்கால விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தடகளம், தேக்வாண்டோ, கால்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து ஆகிய போட்டிகளுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் 150 பேர் பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே நேற்று காந்தி ஸ்டேடியத்தில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமை சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) கண்மணிதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். விளையாட்டு வல்லுநர்கள், பயிற்றுநர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், காந்தி ஸ்டேடியத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் 2ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் தலைமையில், மாணவ-மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சியை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,“கோடைக்கால முகாமில் தினமும் காலை, மாலை என இருநேரங்களிலும் பயிற்சி அளிக்கப்படும். இதில் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேர வழிவகை செய்யப்படும். பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, பால், பிஸ்கட் ஆகியவை தினமும் வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்,’’ என்றனர்.
