திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டங்களை கொடுத்தார்களா? தொடர்ந்து, தமிழ்நாட்டினை புறக்கணிக்ககூடிய ஒன்றிய பாஜ அரசை, நாம் இந்த தேர்தலில் புறக்கணித்து தோற்கடித்து காட்ட வேண்டும்.
இந்த தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் தான் போட்டி. இதில் டெல்லி அணியை தோற்கடித்து, தமிழ்நாடு அணி ஜெயித்து காட்ட வேண்டும். நிச்சயம் திமுக தலைவர் தான் மீண்டும் முதலமைச்சராக வரப்போகிறார். அனைத்து இடங்களிலும் எழுச்சியான வரவேற்பு உள்ளது. டி-லிமிட்டேஷனிலும் தோற்றுவிட்டார்கள். நம்ம தான் அந்த பிரச்னையை கையில் எடுத்தோம். கடந்த ஆண்டிலேயே நமது முதல்வர் எச்சரிக்கை விடுத்தார். பல முதல்வர்களை தமிழ்நாட்டிற்கு வர வைத்து கூட்டம் நடத்தினோம்.
தொகுதி மறுவரையறை என்ற டிலிமிட்டேசனை ஏற்றுக்கொள்ள முடியாது என சொன்னோம். தமிழ்நாட்டிற்கான 39 எம்பி பதவிகளை குறைப்பதற்கான வேலையில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டது. தற்போது நாடாளுமன்றத்தில் டிலிமிட்டேசன் செய்ய முடியாது என தோல்வியடைந்து விட்டார்கள். இதன் மூலம் நமது தலைவருக்கு தான் முதல் வெற்றி. 2வது வெற்றி மீண்டும் நமது தலைவர் முதலமைச்சர் ஆவார் என்ற செய்தி நமக்கு வரணும்.
அதற்கு அனைவரும் உறுதி கொடுக்க வேண்டும். உங்கள் ஓட்டு மட்டும் போதாது. அதற்கு உங்கள் ஒருவரது ஓட்டும் 5 முதல் 10 ஓட்டுக்களாக பெருக வேண்டும். சங்கி கூட்டத்தையும், அடிமை கூட்டத்தையும் தமிழ்நாட்டிற்குள் விட்டு விடக்கூடாது என்ற பிரசாரத்தை முன்னேடுத்தால் திமுக மற்றும் கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
* எடப்பாடி போட்டோவுக்கு ஒன்ஸ்மோர்…
பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்த போட்டோவை கொண்டு வந்து உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தனர். டிரோன் மூலமும் போட்டோக்கள் உதயநிதியிடம் கொடுக்கப்பட்டது.
அந்த போட்டோவை அவர் பொதுமக்களிடம் காண்பித்தார். அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் ஒன்ஸ் மோர் என கூறி போட்டோவை மீண்டும் காண்பிக்க சொன்னார்கள். இதற்கு துணை முதல்வர், என்னப்பா சினிமா பாட்டு ஒன்ஸ்மோர் கேட்பது போல கேட்கிறீங்க என கூறிவிட்டு மீண்டும் போட்டோவை காண்பித்தார்.
