கேரளாவில் உதயகுமார் கஸ்டடி மரண வழக்கில் திருப்பம்; விடுதலையான 4 போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் நெருக்கடி: சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: கேரளாவில் நடந்த உதயகுமார் சித்ரவதை மரண வழக்கில் போலீசார் விடுதலையை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உதயகுமார் (28) என்பவர் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டார். கண்டேஸ்வரம் பூங்காவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவர், போர்ட் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

மூங்கில் தடிகளாலும், இரும்பு பைப்புகளாலும் அவரது தொடைகளில் போலீசார் கடுமையாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ததில் குளறுபடி செய்ததோடு, உண்மைகளை மறைக்க முயன்றனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், ஜிதகுமார் உள்ளிட்ட இரண்டு போலீசாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், கேரள உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை முறையாக இல்லை எனக் கூறி, முன்னாள் போலீசார் ஜிதகுமார், டி.அஜித் குமார், இ.கே.சாபு மற்றும் டி.கே.ஹரிதாஸ் ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த விடுதலையை எதிர்த்து ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போலீசார் 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சித்ரவதை மரணம் தொடர்பான தீவிரத்தன்மை மற்றும் ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற சிபிஐ தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மே 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு உதயகுமார் மரண வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: