தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி; தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய நாடகம் முறியடிப்பு: எதிர்க்கட்சிகளை முடக்க போட்ட சதி அம்பலம்

புதுடெல்லி: தொகுதி வரையறை மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி எதிர்க்கட்சிகளை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு புதிய சட்ட மிரட்டல்களை விடுத்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க தீவிர முயற்சி செய்தது. அப்போது அக்கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மசோதா கைவிடப்பட்டது. தற்போது 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மூன்று புதிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டது. ஆனால், இதற்கு தேவையான 3ல் 2 பங்கு ஆதரவு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இல்லாத சூழலில், மசோதா  தோல்வியில் முடிந்ததால் இந்த சிறப்பு கூட்டத் தொடரே வெறும் அரசியல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது.

நேற்று லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி, ‘எண்ணிக்கை விளையாட்டை காலம் தீர்மானிக்கும்’ என்று கூறி எதிர்க்கட்சிகளை மறைமுகமாக மிரட்டினார். இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை நாட்டுப் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 2010ம் ஆண்டில் எதிர்த்த கட்சிகளின் செல்வாக்கு தற்போது சரிந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். பெண்களுக்கு உண்மையில் அதிகாரம் வழங்குவதை விட, அவர்களின் வாக்குகளை கவரவே இந்த வித்தையை ஒன்றிய அரசு கையாள்கிறது.

ஒன்றிய அரசின் இந்த தந்திரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ‘இந்த விவாதம் மகளிர் இடஒதுக்கீடு பற்றியது அல்ல, மாறாக விவாதத்தின் திசையை மாற்றவே இந்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது’ என்றார். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி, ‘சாணக்கியரே உயிரோடு இருந்திருந்தால் உங்கள் தந்திரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பார்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை மற்றும் லோக்சபா இடங்களை அதிகரிப்பதன் மூலம், மகளிர் இடஒதுக்கீட்டை ஒரு துருப்புச் சீட்டாக மாற்றி ஜனநாயகத்தை குலைக்க ஒன்றிய அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த மசோதாவை அவசரமாக கொண்டு வருவது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதர், ‘தேர்தல் முறையை மாற்றி ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கவே மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது’ என்று சாடினார். பெண்களுக்கான திட்டங்கள் மூலம் வாக்குகளை கவரும் பாஜகவின் நீண்டகால திட்டம் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிந்தது. ஏற்கனவே லாட்லி பெஹ்னா போன்ற திட்டங்களால் பெண்களை ஏமாற்றி வரும் பாஜக, இப்போது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கி எதிர்க்கட்சிகளை குற்றவாளியாக்க துடிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடந்த விவாதத்திற்கு இடையே, 2023ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை மூன்று புதிய மசோதாக்களுடன் இணைத்து ஒன்றிய அரசு அவசரமாக அறிவிக்கை வெளியிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், ‘ஒரு மசோதா நிறைவேறாவிட்டால் அதனுடன் தொடர்புடைய முந்தைய சட்டமும் செல்லாததாகிவிடும் வகையில் பாஜக சதி செய்துள்ளது’ என்றார். இதன் மூலம் மசோதாக்கள் தோல்வியடைந்தால், அதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனப் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட ஒன்றிய அரசு முனைகிறது. தோல்வியிலும் வெற்றியைத் தேடும் பாஜகவின் இந்த நயவஞ்சகமான செயல், பெண்களின் உரிமையை விட அதிகாரத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.

அந்தரத்தில் தொங்கும் 33% மகளிர் இடஒதுக்கீடு:
கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்றத்தில் இதுவரை ஏற்படாத மிகப்பெரிய பின்னடைவு தற்போது ஏற்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்தின் 131 திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் லோக்சபாவில் பாஜக அரசு முதல்முறையாக படுதோல்வி கண்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு, ஒன்றிய அரசு கொண்டு வந்த அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா ஒன்று போதிய பெரும்பான்மை இன்றி தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். வாக்கெடுப்பு முடிவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், அவையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. தோல்வி உறுதியானதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மகளிர் இடஒதுக்கீடு உடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டையும் உடனடியாக வாபஸ் பெற்றார். இதன் மூலம் 2029ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் என்பது அந்தரத்தில் தொங்குகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

 

Related Stories: