புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவையில் நேற்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு ஒரு மர்மப் புதிரை முன்வைத்தார். கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி ஆற்றிய உரையைத் தான் கவனித்ததாகவும், அப்போது தனது செல்போனில் தேதியைப் பார்த்தபோது ஒரு விஷயம் புரிந்ததாகவும் அவர் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இந்தக் கேள்விக்கான முழு விடை 16 என்ற எண்ணில் உள்ளது. எல்லாமே 16 என்ற எண்ணில் தான் இருக்கிறது. ஒன்றிய அரசின் பிரச்னைகளுக்கான தீர்வும் 16 என்ற எண்ணில் தான் ஒளிந்துள்ளது’ என்று அவர் பேசினார். இது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 மக்களவை இடங்கள் உள்ளன. தொகுதி மறுவரையறை சட்டத்தால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் உள்ள நிலையில், 16 எம்பிக்களைக் கொண்ட அந்த முக்கிய கூட்டணிக் கட்சி ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதையே அவர் சூசகமாக உணர்த்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், பாஜக பெரும்பான்மை பலத்தை இழக்கத் தேவையான எம்.பி.,க்களின் எண்ணிக்கையையும் அவர் குறிப்பிட்டிருக்கலாம் என்று பேசப்படுகிறது. பிரதமரின் உரை வலுவிழந்து காணப்பட்டதைச் சுட்டிக்காட்டவே அவர் அந்தத் தேதியைக் குறிப்பிட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்தப் புதிர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பிடிகொடுக்காமல் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘அது ஒரு புதிர், அதற்கான விடையை இப்போதே கூறிவிட முடியாது. எனக்குச் சரியான தீர்வு கிடைக்கும் போது கண்டிப்பாகச் சொல்கிறேன்’ என்று தெரிவித்தார். 16 என்ற எண்ணைச் சுற்றி ராகுல் காந்தி உருவாக்கியுள்ள இந்த புதிர், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் 16 இடங்கள் தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், ஒன்றிய பாஜக அரசுக்குத் தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற விவாதமும் தேசிய அரசியலில் பேசப்படுகிறது.
