புதுடெல்லி: 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அரசு சாட்சியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளதால், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி திகார் சிறையில் இருந்துகொண்டே ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்களான ஷிவிந்தர் சிங் மற்றும் மால்விந்தர் சிங் ஆகியோரின் மனைவிகளிடம் இருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் முதன்முறையாக குற்றவாளியாகக் குறிக்கப்பட்டார். சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறையால் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு முக்கிய மனுவைத் தாக்கல் செய்தார். அதில், 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் தான் ‘அரசு சாட்சியாக’ (அப்ரூவர்) மாற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சட்டப்படி ஒரு குற்றவாளி அரசு சாட்சியாக மாறினால், அவர் வழக்குப் பற்றிய அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அவருக்கு மன்னிப்பு வழங்கப்படவோ அல்லது தண்டனை குறைக்கப்படவோ வாய்ப்பு உள்ளது. மற்ற சட்ட வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், ஜாக்குலின் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளார். தான் ஒரு பலிகடா என்றும், சுகேஷ் தன்னைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் விரிவாகக் கூறத் திட்டமிட்டுள்ளார்.
இந்த அதிரடி திருப்பத்தைத் தொடர்ந்து, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா, இது குறித்து பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜாக்குலின் வழங்கும் தகவல்கள் இந்த வழக்கை நிரூபிக்க எந்த அளவுக்கு உதவும் என்பதை ஒன்றிய அரசின் விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை ஆய்வு செய்யும். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் அப்ரூவராக தகுதி பெற்றால், அவர் குற்றவாளி என்ற நிலையிலிருந்து மாறி, இந்த வழக்கில் மிக முக்கிய சாட்சியாகத் திகழ்வார். இதனால் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
