தைரியம் இருந்தா என் காரை தினமும் சோதனை செய்யுங்க: மத்திய பாதுகாப்பு படைக்கு மம்தா பானர்ஜி சவால்

இஸ்லாம்பூர்: “தைரியம் இருந்தால் எனது காரை தினமும் சோதனை செய்யுங்கள்” என மத்திய பாதுகாப்பு படையினருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் முதற்கட்ட பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இங்கு ஏற்கனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை போன்ற விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், ஒன்றிய பாஜ அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி உள்பட அக்கட்சியின் வாகனங்களை மட்டுமே குறி வைத்து மத்திய படையினர் சோதனை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மம்தா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையம் சென்ற போது அவரது காரை மத்திய பாதுகாப்பு படையினர் சோதனையிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். உத்தர தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பிரசாரத்துக்கு செல்ல கொல்கத்தா விமான நிலையம் சென்ற போது எனது காரை மத்திய பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்” என தெரிவித்ததுடன், “உங்களுக்கு தைரியம் இருந்தால் தினமும் எனது காரை சோதனை செய்யுங்கள்” என ஆவேசமாக சவால் விடுத்தார்.

Related Stories: