சிஐஎஸ்எப் அதிகாரி என கூறி நாடகம்; 67 இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி நகை, பணம் பறித்து மோசடி: திருமணத்தை மறைத்த 2 குழந்தைகளின் தந்தை கைது

 

திருமலை: திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து, சிஐஎஸ்எப் அதிகாரி என கூறி 67 இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி பணம், நகைகள் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சிஐஎஸ்எப் அதிகாரி போல் உடையணிந்த வாலிபர் ஒருவர் நடமாட்டம் இருந்தது. அவர் மீது சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவர் அணிந்திருந்த அடையாள அட்டையை பார்த்து விசாரித்தனர். அது, போலி அடையாள அட்டை என தெரியவந்தது.

விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் காகுளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணா (33) என்பதும் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளது. சமூக ஊடகங்களில் தன்னை ஒரு சிஐஎஸ்எப் அதிகாரி என்று தெரிவித்துள்ளார். மேலும், திருமண இணையதளங்களில் சிஐஎஸ்எப் சீருடை அணிந்த தனது புகைப்படங்களை பதிவேற்றி பல பெண்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் என தெரியவந்தது. மேலும் ​பாலகிருஷ்ணாவின் போன் அழைப்புகள், உரையாடல்கள் போன்றவற்றை ​போலீசார் ஆய்வு செய்தனர்.

இதன் மூலம் 67 இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சாட்டிங் செய்ததும், அவர்களும் இதை உண்மை என நம்பி பணம், நகைகள் கொடுத்து ஏமாந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணாவை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: