ஊழல் செய்வதில் பாஜக, திரிணாமுல் போட்டி: மேற்குவங்கத்தில் ராகுல் காந்தி பேச்சு

 

 

மால்டா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் ஊழல்களால் விரக்தியடைந்துள்ள மக்கள் இந்த தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் 23, 29ம் தேதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராய்கஞ்ச் மற்றும் மால்டாவில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசுகையில், ‘நாட்டின் தொழில் மையமாக விளங்கிய மேற்குவங்கத்தை முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களும், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் சீரழித்துவிட்டனர்.

பிரதமர் மோடி ஊழல்வாதி என்றால், அவருக்கு சற்றும் குறையாத வகையில் திரிணாமுல் காங்கிரசும் ஊழல் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. ஊழல் வழக்குகளை பொறுத்தவரை, சாரதா சிட் ஃபண்ட் ஊழலில் 17 லட்சம் முதலீட்டாளர்களின் 1,900 கோடி ரூபாயும், ரோஸ் வேலி சிட் ஃபண்ட் ஊழலில் 31 லட்சம் முதலீட்டாளர்களின் 6,600 கோடி ரூபாயும் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் திரிணாமுல் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் தங்களது ஓட்டு மூலம் இரு கட்சிகளுக்கும் வலுவான செய்தியைச் சொல்லத் தயாராகிவிட்டனர்’ என்று ராகுல் காந்தி கூறினார்.

தற்போது நடைபெறவுள்ள ராய்கஞ்ச் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோஹித் செங்குப்தா போட்டியிடுகிறார். இங்கு 2021ம் ஆண்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திரிணாமுல் கட்சியில் இணைந்த அமைச்சர் கிருஷ்ணா கல்யாணி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ், இந்த மும்முனை போட்டியில் தனது செல்வாக்கை நிரூபிக்க முயற்சிக்கிறது.

Related Stories: