வாராஹி அம்மன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்

பகுதி 1

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பாரதத்தின் பல இடங்களில் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. சில இடங்களில் தற்காலத்தில் அம்மனுக்கு பல புதிய திருக்கோயில்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பல தலங்களில் தனி சந்நதிகளில் அருளாட்சி செய்து வருகிறாள். அத்தகைய சில தலங்களை இங்கு காணலாம்.

பள்ளூர்

கோஷ்ட தேவியாக இருந்து அருளினாலும் அம்பிகைக்குப் புராதனமான தனிக்கோயில் சில இடங்களில் தான் உள்ளது. அதில் பள்ளூரில் அமைந்திருக்கும் ஆலயம் சிறப்பானது. அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் பள்ளூர் உள்ளது. இங்கு தேவி தெற்கு நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ அரசாலை என்ற பெயரில் அருள்பாலிக்கின்றாள். தொன்மையான இந்த பள்ளூர் கிராமம் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. அம்பாள் இங்கு கிராம தேவதையாக அருள்கின்றாள். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலான பள்ளூரில் தற்போது ஸ்ரீவாராஹி தேவி அருள்புரியும் இந்தக் கருவறையில் மந்திரக்காளியம்மன் என்ற அம்பிகை அருளாட்சி நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் ஒரு துர்மந்திரவாதியின் மந்திரக் கட்டுக்குள் இருந்ததால் அவளது திருக்கோயில் மூடப்பட்டு அவளுடைய சக்தியும் ஒடுங்கியிருந்தது. அம்பிகையின் சக்தியை யாரால் ஒடுக்க முடியும்? தக்க தருணத்திற்காகக் காத்திருந்தாள் அம்பிகை. மந்திரவாதியின் அட்டகாசங்கள் அடக்கும் நேரம் நெருங்கியது.

அத்திருக்கோயிலின் அருகில் இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, ஆற்று வெள்ளத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் மிதந்து வந்தாள். நேரே மந்திரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று கோயிலின் கதவைத் திறக்கச் சொன்னாள். துர்மந்திரவாதி தன்னைக் கட்டி வைத்துள்ளதால், அந்தக் கதவைத் திறந்தால் அவனால் ஆபத்து வரும் என்று கூற, வாராஹி சிரித்துக்கொண்டே, ‘நடப்பதைப் பார்!’ என்று கூறி மந்திரவாதி வரும் வரையில் கதவினருகில் காத்திருந்தாள்.

வாராஹியின் செயலைக் காண மற்ற தேவதைகளும் அங்கு கூடினர். நள்ளிரவில் மந்திரவாதி வந்தான். தன் கால்களால் அம்பாள் கருவறைக் கதவை உதைத்தான். கோபமாக அவனுக்காகக் காத்திருந்த அன்னை ஸ்ரீவாராஹி, அவனை இரு கூறுகளாகக் கிழித்து எறிந்தாள். மந்திர காளி அம்மன் கட்டுக்குள் இருந்து விடுபட்டாள். அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீவாராஹியிடம் தான் இருந்த கருவறையில் அவள் வீற்றிருந்து அருள வேண்டுமென கேட்டுக்கொண்டாள். துர்மந்திரவாதியின் உடல் விழுந்த இடத்தின் அருகே மந்திரகாளியம்மன் கோயில் கொண்டாள். அம்பாள் ஸ்ரீவாராஹி மந்திரகாளியம்மன் கருவறையில் அமர்ந்து அருள்புரிகின்றாள்.

பாருங்கள்! தெய்வத்தையே இந்த துர்மந்திரம் கட்டுப்படுத்துகின்றது. நம்முடைய நேரம், காலம் சரியாக இல்லையென்றால் தெய்வ அருள் கிடைப்பதும் ஏதோ ஒரு வகையில் தடைபடுகின்றது. அம்பாள் ஸ்ரீவாராஹி இங்கு எம பயம் நீக்கும்  வரப்பிரசாதியாக அருள்கின்றாள். இத்திருக்கோயில் முகப்பு வாயில் கடந்து சென்றால் உள் மண்டபத்தின் இடப்புறமாக ஸ்ரீவிநாயகப் பெருமான் அருள்பாலிக்கின்றார். மூலக்கருவறையில் இரு வாராஹி அம்மன்களை தரிசிக்கலாம். ஒருவர் சிறு வடிவிலான ஆதிவாராஹி. அடுத்தவர் பெரிய வடிவிலான தற்போதைய அம்மன் ஸ்ரீவாராஹி. இந்தப் பெரிய வாராஹியின் பீடத்தில் ஆறு மாதர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் சேனைத் தளபதியாக இருந்து அருளும் ஸ்ரீவாராஹி தேவி பல திருத்தலங்களில் சங்கு, சக்கரம் அபய வரத முத்திரைகள் தாங்கி தெற்கு நோக்கி அருள் பொங்க வீற்றிருக்கின்றாள். கருவறை கோபுரத்தில் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி போன்றோர் பொலிவுடன் காட்சி தருகின்றனர். ஆலயத்தின் கூரையில் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீகாமாட்சி தவிர அன்னை ஸ்ரீவிசாலாட்சியின் உருவங்களைக் காணலாம். சப்த மாதர்கள் சுதை வடிவில்! அம்பாள் ஸ்ரீவாராஹியின் ரூபத்தைப் பிராகாரத்திலும், விமான கோபுரத்திலும் தரிசிக்கலாம்.

மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் சப்த மாதர்களில் ஒருவராக ஸ்ரீ வாராஹி அருள்புரிகிறார். விசேஷ தினங்களில் அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. அதேபோல் மயிலாப்பூரில் அபிராமபுரம் முதல் தெருவில் உள்ள பச்சையம்மன் ஆலயத்திலும் ஸ்ரீ வாராஹி வணங்கப்படுகிறாள். விசேஷ தினங்களிலும், ஆடி ஆஷாட நவராத்திரியிலும் அம்மனுக்கு அர்ச்சனை நடைபெறுகின்றன.

மயிலாப்பூர் கோலவிழி பத்ரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில்களிலும் சப்தகன்னியர் சந்நதிகளில் ஒருவராக வாராஹி அம்மன் எழுந்தருளியுள்ளாள் விசேஷ ஹோமங்கள், அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.

ஆலந்தூர்

இத்தலத்தில் மேல இலந்தைகுளத்தில் தர்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில், கிருஷ்ணர், வாராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, துர்கை, கணபதி எல்லோருக்கும் தனி சந்நதிகள் அமைந்துள்ளன.

வில்லிவாக்கம்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீபாலி அம்மன் கோயிலின் எதிரில் உள்ள தெருவில் உள்ள பிள்ளையார் திருக்கோயிலில் அன்னை ஸ்ரீவாராஹி அருள் புரிந்து வருகிறாள். முதலில் இங்கு ஸ்ரீ வாராஹியின் சிறு படத்தை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் பக்தர் ஒருவர் அம்பிகையின் பெரிய படத்தைக் கொடுக்க, அம்பிகையின் வழிபாடு பிரபலமானது. மேலும் ஒரு பக்தர் தேவியின் பஞ்சலோக விக்ரகத்தைத் தர, அன்னை அதன் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறாள். விசேஷ தினங்களில் அம்பிகையைத் தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். இத்திருக்கோயிலில் அம்பிகை வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.

அம்பத்தூர்

சென்னை – அம்பத்தூரை அடுத்த கங்கை நகரில் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடத்தில் வாராஹி கொலுவீற்றிருக்கிறாள். பக்தர்கள் பலரும் இங்கு வந்து அம்பிகையைத் தரிசித்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெற்றிருக்கின்றனர். ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீ வாராஹியின் பெருமைகளைப் பலரும் அரிய நூல்களாக வெளியிட்டிருக்கிறார். அம்பத்தூரில் பாபா கோயில் அருகில் (ராக்கி தியேட்டர் அருகில்) ஸ்ரீ வாராஹி தேவி திருக்கோயில் கொண்டுள்ளாள். மகா கணபதியும் இத்திருக்கோயிலில் காட்சி தருகிறார்.

சோழிங்கநல்லூர்

சென்னை சோழிங்கநல்லூரில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு பெரிய திருக்கோயிலை ஸ்ரீ பிரத்யங்கரா ஸ்வாமிகள் அமைத்துள்ளார். அத்திருக்கோயிலில் ஸ்ரீ வாராஹிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும்.

படப்பை

சென்னைக்கு அருகில் உள்ள படப்பையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயதுர்கா ஆலயத்தில் ஸ்ரீ ப்ரத்யக்ஷ வாராஹி காட்சி தருகிறாள்.

மாதவரம்

சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள அலெக்ஸ் நகர் சாலை, காமராஜ் நகரில் அன்னை வாராஹிக்கு ஆலயம் அமைந்துள்ளது.

ஊரப்பாக்கம்

இவ்வூரில் உள்ள ஐயன்சேரியில் கோதாவரி நகர் 3வது தெருவில் கங்கையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அதில் நாகாத்தம்மன், முனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி எனப் பல மூர்த்தங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலில் பல புற்றுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலில் நான்கு முகங்களுடன் எட்டு திருக்கரங்களுடன் புதுமையாக அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அன்னை ஸ்ரீ வாராஹி தேவி. தன் முகத்துடன், நரசிம்மர், ஹயக்ரீவர் மற்றும் சிவனின் திருமுகங்களைக் கொண்டு பக்தர்களின் குறை தீர்க்கிறாள் அன்னை. ஸ்ரீ துர்கை சித்தரின் ஆசிபெற்ற திரு சத்யநாராயண மூர்த்தி அவர்களின் பெருமுயற்சியால் இத்திருக்கோயில் பொலிவுடன் விளங்குகிறது.

வரிச்சிக்குடி

காரைக்கால் வரிச்சிக்குடி கிராமத்தில் உள்ள பிரத்யங்கரா தேவி ஆலயத்தில் தனி சந்நதியில் அருள் சக்தியுடன் அன்னை வாராஹி அருள்பாலிக்கிறாள்.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் வாராஹி அம்மன் தனிச் சந்நதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரியில் விழா கொண்டாடப்படும். கணபதி ஹோமத்துடன் தொடங்கும் இவ்விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்நாட்களில் வாராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். அம்பிகை, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், பூ, காய்கனிகள் போன்ற அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆஷாட நவராத்திரி விழா நிறைவு நாளன்று, வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோயில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

சுவாமிமலை

சுவாமிமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி அலயத்திற்கருகில் உள்ள ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ வாராஹிக்குத் தனி சந்நதி அமைந்துள்ளது. இத்திருக் கோயிலில் ஸ்ரீ வாராஹியின் 12 திருநாமங்களில் எழுவருக்கு சிலா ரூபங்கள் உள்ளன. அவை: ஸ்ரீ பஞ்சமி, ஸ்ரீ சங்கேதா, ஸ்ரீ சமேஸ்வரி, ஸ்ரீ போத்ரிணி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ மகாசேனா, ஸ்ரீ அரிக்நி ஆகியோர்.

திருநெடுங்களம்

திருச்சி அருகில் திருநெடுங்களம் மங்களாம்பிகை உடனுறை நித்திய சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வாராஹி அம்மன் வரம் பற்பல அளித்து தம்மை அடியவர்களை காத்தருளுபவள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சக்தி பீடங்களில் முக்கியமான தலமாக விளங்குகிறது. அங்குள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலில் அன்னையின் இடது புறத்தில் வாராஹி தேவி அருள் பாலிக்கிறாள். முக்கிய தினங்களில் அங்கு வாராஹி அம்பிகைக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. அங்கு வாராஹி அம்மனின் எதிரில் ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தை வலம் வரும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.

வாலாஜா பேட்டை

வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பஞ்சமுக வாராஹி அன்னை அருள்பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரியில் பத்து நாட்களிலும், பஞ்சமுக வாராஹி ஹோமம், அபிஷேகம், சகஸ்ர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

திருமலைச்சேரி

செங்கல்பட்டு அருகில் உள்ள வாலாஜாபாத் ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருமலைச்சேரி என்ற கிராமத்தில் பழமையான சிவாலயத்தில் முன் பக்கத்தில் அன்னை மஹா வாராஹி ஆலயத்தில் உள்ள வாராஹி அம்மன் வரம் பற்பல அளித்து தம்மை அடியவர்களை காத்தருளுபவள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சக்தி பீடங்களில் முக்கியமான தலமாக விளங்குகிறது. அங்குள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலில் அன்னையின் இடது புறத்தில் வாராஹி தேவி அருள் பாலிக்கிறாள். முக்கிய தினங்களில் அங்கு வாராஹி அம்பிகைக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. அங்கு வாராஹி அம்மனின் எதிரில் ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தை வலம் வரும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.

தளச்சேரி

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி திருவாடுதுறை கிளை மடம் அருகே உள்ள தளச்சேரி என்னும் இடத்தில் உள்ள மானேந்தியப்பர் திருக்கோயிலில் அருளும் வாராஹி (மந்திர வாராஹி) அம்மனும் தனித்துவம் மிக்கவள்.

டி.குண்ணத்தூர்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குண்ணத்தூர் அருகே மகாசக்தி பீடத்தில் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களை தன் பார்வையினால் காத்து வருகிறாள்
அம்பிகை.

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும் போதே டி.குண்ணத்தூர் அருகில் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் மகாசக்தி மாரியம்மனின் அருள் பெறலாம். கோயில் அத்தனை அமைதியாய் இருக்கிறது. ஆலயத்தினுள் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள், ஸ்ரீ மகா வாராஹி தேவி, ஸ்ரீ பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி ஆகிய மூன்று தேவிகளும் பிரம்மாண்டமாய் எழுந்தருளி இருக்கின்றனர். பௌர்ணமி தினத்தில் சாம்பலைத் தான் பிரசாதமாக வழங்குகின்றனர். அன்றைய தினம் பக்தர் களின் கூட்டம் அதிகம் இருக்கும். ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் பூக்குழி பெருவிழா நடைபெறுகிறது. குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் ஏதேனும் பிரச்னை என்று வந்து இங்குள்ள அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.

திருவண்ணாமலை

அண்ணாமலையார் திருக்கோயிலில் வாராஹி அம்மனுக்கு தனிச்சந்நதியில் தனிக் கோயில் உள்ளது சிறப்பு.

பண்ருட்டி

பண்ருட்டியில் உள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் வாராஹி அம்மனுக்கு தனிச் சந்நதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரகோசமங்கை

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகே மிகவும் பழமை வாய்ந்த சுயம்பு மகா வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ‘சீதளா தீர்த்தம்’ என்ற தீர்த்தம் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தைப் பற்றி தன்னுடைய திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். மேலும், உத்தரகோசமங்கை ஆலயத்தை அலங்கரிக்கும் இறைவன் – இறைவி இருவருடைய தீர்த்தவாரியும், இந்த சீதளா தீர்த்தத்தில் தான் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் உள்ள சுயம்பு வாராஹி அம்மனை, ‘ஆதி வாராஹி’ என்று போற்றுகின்றனர். மங்கை மாகாளி அம்மன் என்பதும் இந்த தேவியின் திருநாமத்தில் ஒன்று. அதுமட்டுமல்ல இந்த உத்தரகோசமங்கை ஆதி வாராஹி சுயம்புவாகத் தோன்றி, ஆதிகாலத்தில் இருந்தே அருள்பாலித்துவருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுயம்பு வாராஹி அம்மன் தோன்றி சுமார் 2500 ஆண்டுகள் ஆகின்றன!

வேலூர்

வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் ரத்னகிரி பாலமுருகன் திருக்கோயில் அருகிலும் வாராஹி அம்மனுக்கு மிகவும் பழமையான கோயில் ஒன்று இருக்கிறது. வேலூர், காட்பாடி தாலுக்காவில் உள்ள அரும்பருத்தி என்ற இடத்தில் ஸ்ரீ கோட்டை வாராஹி அம்மன் கோயில் தெருவில் ஸ்ரீ வாராஹிக்கு ஒரு திருக்கோயில் அண்மையில் (2020) அமைக்கப்பட்டுள்ளது. வேலூரில் பொய்கை மோட்டூர் சாலையில் அழகிய ஸ்ரீ மஹா வாராஹி பீடம் அமைந்துள்ளது. அதில் அன்னை வாராஹி அருளாட்சி செய்து வருகிறாள்.

ஆற்காடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் ஸ்ரீ வாராஹிக்கு அழகான திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில், ஸ்ரீ வாராஹிக்கு விசேஷமான அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி, அஷ்டமி, ஷஷ்டி, ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயில் ஆற்காட்டில் உள்ள வெட்டி மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் வாராஹி அம்மனுக்கு, புதிய திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் திருவேட்டீஸ்வரி உடனாய அரசேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இங்கு தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில், கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வாராஹி அம்மன்
அருள்பாலிப்பது சிறப்பு.

பாரியூர்

ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோயிலில், மூலவரைச் சுற்றி, பிராம்ஹி, மாகேஸ்வரி, கவுமாரி, வாராஹி, வைஷ்ணவி, மாகேந்திரி, சாமுண்டி என்ற சப்த மாதர் அருள்பாலிக்கின்றனர். திருமணத்தடை, வியாபார விருத்தி, குடும்ப ஒற்றுமைக்கு, வாராஹியை வழிபடுவோருக்கு காரியம் சித்தியாகிறது. குறிப்பாக திருமணத் தடை நீங்க வேண்டுவோர், நேர்த்திக்கடனாக 108 விரலி மஞ்சளை நூலில் கோர்த்து, வாராஹிக்கு மாலையாக அணிவித்து வழிபடுகின்றனர்.

சாலமேடு

தமிழகத்தில் விழுப்புரம் அருகே உள்ளது சாலமேடு என்ற ஊர். இங்கு அஷ்டவாராஹி அம்மன் ஆலயம் இருக்கிறது. மகா வாராஹி, ஆதி வாராஹி, ஸ்வப்ன வாராஹி, லகு வாராஹி, உன்மத்த வாராஹி, சிம்ஹாருடா வாராஹி, மகிஷாருடா வாராஹி, அச்வாருடா வாராஹி ஆகிய எட்டு வாராஹிகளும் இங்கு அருளாட்சி செய்து வருகின்றனர். உலகிலேயே வாராஹி அம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் ஆலயம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாத பௌர்ணமி மற்றும் அமாவாசை மிகவும் சிறப்பாக அன்னதானத்துடன் கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் சாலமேடு அஷ்டவாராஹி கோயில் உள்ளது. தளவானூர் திருப்பாச்சனூர் செல்லும் பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் கூட இத்தலத்தை அடையலாம்.

(தொடரும்)

Related Stories: