பாலக்காடு அருகே அரசு பஸ் மரத்தின் மீது மோதி விபத்து பெண் பரிதாப பலி:30 பேர் படுகாயம்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதியிலிருந்து நெம்மாரா வழியாக பாலக்காடு நோக்கி வந்த கேரள அரசு பஸ் சாலையோர மரத்தில் மோதியதில் பெண் பயணி உயிரிழந்தார். மேலும், 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றன. இதனால், நெல்லியாம்பதி, அட்டப்பாடி அமைதிப்பள்ளத்தாக்கு மற்றும் பரம்பிக்குளம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லக்கூடிய வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை நெல்லியாம்பதி- பாலக்காடு வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் நெல்லியாம்பதியிலிருந்து பாலக்காட்டிற்குப் புறப்பட்டது. போத்துண்டி அணைக்கு முன்பாக காட்டுவழிச்சாலையில் பஸ் நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரங்களில் மோதியது.இந்த விபத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

அப்பகுதி மக்கள் மீட்டு நெம்மாராவிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நெம்மாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து பயணிகளின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Related Stories: