சென்னை: சென்னை ஆவடி விமானப்படை மையத்தில் பணியாளர் சேர்க்கைக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆள்மாறாட்டம் செய்த இருவர், ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் வைத்து பதில்களை கேட்டு எழுதிய இருவர் என ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விமானப்படை மையத்தில் நடைபெற்ற கிளார்க் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் நவீன ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த 4 பேரை காவல் துறை கைது செய்துள்ளனர்.
தேர்வு அறைக்குள் நுழைய முயன்றபோது, hall ticket-ல் இருந்த புகைப்படமும் சம்பந்தப்பட்ட நபரின் முகமும் ஒத்துப்போகாததால் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நவீனஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ப்ளூடூத் போன்ற மின்னணு கருவிகளைப் பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ய முயன்றதும் சோதனையில் அம்பலமானது.
ஆள்மாறாட்டம் செய்த ஹரியாணாவை சேர்ந்த கவுரவ் (21), அனில் (27) ஆகியோரும் டிரான்ஸ்மிட்டர் பாக்ஸ் வைத்து தேர்வு எழுதிய சவான் (25), தீபக் ( 24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முத்தாபுதுப்பேட்டை மற்றும் ஆவடி போலீசார் இந்த 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இவர்களுடன் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வு முறைகளில் வேறு ஏதும் முறைகேடு ஏற்பட்டுள்ளதா அதேபோன்றுள வினாத்தாள் ஏதும் கசிந்துள்ளது என்ற பல்வேறு கோணத்தில் விமானப்படை அதிகாரிகளும் ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசாரும் தற்போது தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து வந்து தேர்வில் முறைகேடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
