*சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
சென்னிமலை : சென்னிமலை வனப்பகுதியை ஒட்டி சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னிமலை வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதில், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கணுவாய் வழியாக காங்கயம் செல்லும் ரோட்டில் சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் இந்த வனப்பகுதி உள்ளது.
இந்த, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கோழி கழிவுகள், பயன்படாத மெத்தைகள், தலையணைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு கழிவுகளை சாலையோரத்தில் பலர் கொண்டு வந்து போட்டு செல்வது உண்டு.
இதனை சென்னிமலை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அடிக்கடி அகற்றி வருவார்கள். வனப்பகுதியில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தாலும் அதன் அருகிலேயே சிலர் தொடர்ந்து சாலையோரங்களில் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீப காலமாக வெளியூர்களில் இருந்து கழிவு பஞ்சுகளை வாகனங்களில் கொண்டு வந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மூட்டை, மூட்டைகளாக வீசி விட்டு சென்று விடுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கரூரில் இருந்து கொண்டு வரும் கழிவு பஞ்சுகளை சென்னிமலை வனப்பகுதியில் கொட்டும்போது நாங்கள் கையும், களவுமாக பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தோம்.
அதேபோல் உள்ளூரை சேர்ந்தவர்களும் வனப்பகுதியில் கழிவுகளை கொட்டும் போது அபராதம் விதித்து வருகிறோம். இதற்காக ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.இதனையும் மீறி சிலர் நள்ளிரவு நேரங்களில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
வனப்பகுதியை ஒட்டிய சாலையோரங்களில் கழிவுகளை வீசுவதற்காக ஏதாவது வாகனங்கள் நிற்பதை பொதுமக்கள் யாராவது பார்த்தால் இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால் நாங்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.
மேலும் இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதற்கே தூய்மை பணியாளர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். ஆனால் வெளியூர்களில் இருந்து கழிவு பஞ்சுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து வனப்பகுதியை ஒட்டிய சாலையோரம் வீசிவிட்டு செல்வதால் எந்நேரமும் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
வெளியிடங்களில் இருந்து கொண்டு வந்து சாலையோரம் வீசி செல்லும் கழிவுகளை அகற்றுவதற்காக இனி தனியாகத்தான் ஆட்களை நியமிக்க வேண்டும். சமீபத்தில் காங்கயம் ரோட்டில் காஸ் பைப் லைனை வெல்டிங் செய்து இணைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்காக வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில் பைப் லைனை உயரமாக வைப்பதற்காக மண் நிரப்பிய சாக்கு மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர்.
பின்னர் அந்த பணிகள் நிறைவு பெற்றதும் சாக்கு மூட்டைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். அந்த சாக்கு பைகள் உடைந்த நிலையில் தற்போது ஆங்காங்கே வனப்பகுதிக்குள் சிதறி கிடந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. வனத்துறையினர் ஒருபுறம் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வர்களை அழைத்து வந்து வனப்பகுதிக்குள் கிடக்கும் குப்பைகளை மூட்டை, மூட்டைகளாக அகற்றினாலும், மற்றொரு புறம் வெளியூர்களில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
இதில், அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியான காங்கயம் ரோட்டில் உள்ள கணுவாய் வனப்பகுதியில் சாலை ஓரங்களில் இருபுறமும் கம்பி வேலிகள் அமைத்தால் மட்டுமே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கலாம். அதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க சாலையின் இரு புறமும் கம்பி வேலிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
