கோபி அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் போராட்டம்

கோபி : கோபி அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் அதை மீட்டுத்தரக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோபி அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லிபாளையம் கிராமம் இந்திரா நகர் காலனி பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இதனை செல்லிபாளையம் கிராம பகுதியை சேர்ந்த மக்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த மயானத்தை அப்பகுதியில் உள்ள பட்டியல் இன மக்கள் உட்பட பல்வேறு சமூகத்தினர் பயன்படுத்தி வந்த நிலையில், மயானத்தை தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தம் என்று கூறி திடீரென்று ஜேசிபி வாகனம் மூலம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உட்பட எந்த துறை அதிகாரிகளும் இல்லாமல் அடியாட்களுடன் வந்து மயானத்தை சுத்தம் செய்துதுடன் மக்கள் குடியிருந்து வந்த வீடுகளின் பின்புறம் உள்ள குளியல் அறை, கழிப்பறை, மயானத்தில் இருந்த பழைமை வாய்ந்த வேங்கை, வேப்பமரம் உட்பட பல்வேறு மரங்களை வெட்டி சாய்த்து உள்ளனர்.

இதை கேட்க சென்ற மக்களை தகாத வார்த்தைகளால் பேசி அடியாட்களை வைத்து மிரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஜேசிபி வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறத்தாள நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிபாளையம் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை தனி நபர் தனக்கு சொந்தம் என்று கூறி எந்த ஒரு அதிகாரிகள் இல்லாமல் மயானம் இருந்த இடத்தை அழித்தும் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி சாய்த்து ஆக்கிரமிப்பு செய்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற நபர் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மயானத்தை மீட்டுத்தரவில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: