புதுடெல்லி: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஒரே ஒரு சீன அந்நிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘பிரஸ் நோட் 3’ விதியின்படி, இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் எந்தவொரு முதலீடும் கட்டாயம் ஒன்றிய அரசின் முன் அனுமதியை பெற வேண்டும்.
இந்த கடுமையான பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் சரிபார்ப்புகள் காரணமாகவே சீன முதலீடுகள் பெருமளவு குறைந்துள்ளன. கடந்த 2025-26ம் நிதியாண்டில் முந்தைய ஆண்டை போலவே ஒரே ஒரு சீன முதலீட்டு திட்டத்திற்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதே சமயம் ஹாங்காங்கின் ரூ.610.42 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களில் சிங்கப்பூர் மிகப்பெரிய முதலீட்டு மூலமாக திகழ்கிறது. அந்நாட்டின் ரூ.3,259.88 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
