பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், கர்நாடக விவசாயிகளின் நலன்தான் காங்கிரஸ் அரசுக்கு முக்கியம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது.
இந்நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு கர்நாடக மாநில விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கன்னட அமைப்புகள் ஆக.13ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
முதல்வர் டி.கே. சிவகுமாரின் அழைப்பை ஏற்று பெங்களூரு கிருஷ்ணாவில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, ஒன்றிய அமைச்சர்கள் ஷோபாகரந்லஜே , குமாரசாமி, சோமண்ணா, எம்பிக்கள் யதுவீர், கோவிந்த்கார்ஜோள், பாஜ தலைவர் விஜயேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் குறித்து முதல்வர் டி.கே. சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நதி நீர் விவகாரத்தில் இதற்கு முன்பு முதல்வராக பதவி வகித்த பங்காரப்பா, எஸ்எம் கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, தரம்சிங் உள்ளிட்டோர் காலங்களில் மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல்வராக பதவி ஏற்ற இந்த இரண்டு மாதத்தில் கர்நாடக மாநிலத்தின் நலனிற்காக பாடுபடுகிறேன். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.
அணைகளில் நீர் இருப்பு குறைவான அளவு இருந்த நிலையில் நீதிமன்றங்களின் தீரப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நாம் கடைபிடித்து நீரை திறந்து விட வேண்டிய நெருக்கடியில் இயற்கை உதவி செய்துள்ளது. மைசூரு, மண்டியா, பெங்களூருவில் மழை இல்லை என்றாலும் கேரளாவில் பெய்த மழையினால் மாநில அணைகளில் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்வதால் கபினி அணை நிரம்பியுள்ளது.
கேஆர்எஸ் அணை கடந்த 2 நாளில் 5 டிஎம்சி நீர் நிரம்பி நிலைமை தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து குடிநீருக்காக அணைகளில் இருந்து கால்வாயில் நீர் திறந்து விட்டுள்ளோம். அதே நேரம் விவசாயிகள், பொதுமக்கள் என கர்நாடகாவின் 7.5 கோடி பேர்களின் நலனை பாதுகாப்பதில் காங்கிரஸ் அரசுக்கு முக்கியம்.
அதே நேரம் மேகதாது அணை கட்டுவதால் இரண்டு மாநிலத்திற்கும் நன்மை ஏற்படும். குறிப்பாக மேகதாது அணையினால் தமிழகத்திற்கு அதிக நன்மை ஏற்படும். தமிழ்நாட்டுடன் காவிரி நதி நீர் பிரச்னைக்கு மேகதாது அணைகட்டுவது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும். மேகதாது அணையை கட்டியே தீருவோம். இதைதான் அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்னர்’ என்றார்.
* ‘பெங்களூரு வருகையை ஒத்திவைக்க விஜய் ஒப்புக்கொண்டார்’
கர்நாடக முதர்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் கர்நாடகாவிற்கு வர விரும்பினார். ஆனால், எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் கோஷமிடுவதை நான் விரும்பாததால், இன்னும் சிறந்த மற்றும் சுமூகமான சூழலில் நாம் சந்திக்கலாம் என்று நான் அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்றுக்கொண்ட அவர், நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து வாழவும், ஒன்றிணைந்து செயல்படவும் வேண்டும். இறுதியில், இந்தியா ஒன்றுதான் என்று சொன்னதாக தெரிவித்தார்.
