கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவு பெற்றது. கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 74 நாடுகள்/ பிராந்தியங்களை சேர்ந்த அணிகள் சார்பாக 3,000க்கு அதிகமான வீரர், வீராங்கனைகள் 10 வகையான விளையாட்டுகளின் 215 பிரிவுகளில் பதக்க வேட்டை நடத்தினர்.
இப்போட்டியில் 19வது முறையாக களமிறங்கிய இந்தியா 39 பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. இந்திய வீராங்கனை இஷ்ரூப் நரங் மகளிர் ஜூடோ 78 கிலோ எடை பிரிவில் நேற்று 40வது பதக்கமாக வெண்கலம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போராடி தோற்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2022ல் நடந்த போட்டியில் இந்தியா 61 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது.
ஸ்காட்லாந்து தொடரில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 160க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது. 2வது இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் பதக்க வேட்டையில் சதம் அடித்தது. கனடா 3வது இடத்தை கைப்பற்றியது. நிறைவு விழாவில் இந்திய பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் குழுவினர் பங்கேற்று இசை மழை பொழிந்தனர். நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இவ்விழாவில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த சிம்பிள் மைண்ட்ஸ் ராக் இசைக் குழுவினர் அலைவ் அண்ட் கிக்கிங், வாட்டர்ஃபிரன்ட், பிராமிஸ்டு யு எ மிராக்கிள், பெல்பாஸ்ட் சைல்ட் பாடல்களை இசைத்து அசத்தினர். பெம்ஸ், கேமி பர்னஸ், சாண்டி தோம், ஆஸி. பாடகர் டெல்டா குட்ரெம் ஆகியோரும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, 2030ல் 24வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்த உள்ள இந்திய குழுவிடம் காமன்வெல்த் கொடி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அந்த போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயகம் திரும்பினர்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்க வேட்டையாடிய இந்திய குழுவினரின் ஒரு பகுதியினர் நேற்று தாயகம் திரும்பினர். மீராபாய் சானு, லவ்பிரீத் சிங் உள்பட சாதனையாளர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* என்னென்ன பதக்கங்கள்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4வது இடம் பிடித்தது. கிளாஸ்கோ தொடரில் மல்யுத்தம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் இல்லாதது இந்தியாவின் பதக்க வேட்டைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. எனினும் பளுதூக்குதல், குத்துச்சண்டை, தடகளம், பாரா தடகளம், ஜூடோ போட்டிகளில் அமர்களமாக செயல்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தி அசத்தினர்.
கிளாஸ்கோ தொடரில் இந்தியா வென்ற பதக்கங்கள் விவரம்
எண் வீரர்/வீராங்கனை விளையாட்டு பதக்கம்
1. மீராபாய் சானு பளுதூக்குதல் (48 கி.) தங்கம்
2. ஷர்மிளா தன்கர் பாரா ஷாட்புட் F57 தங்கம்
3. திலிப் காவிட் பாரா 100 மீ. ஓட்டம் T47 தங்கம்
4. அஸ்மிதா டே ஜூடோ மகளிர் 48 கி. தங்கம்
5. ஹர்ஷ் சிங் ஜூடோ ஆண்கள் 60 கி. தங்கம்
6. சோமன் ராணா பாரா ஷாட்புட் F57 தங்கம்
7. பிரீத்தி பவார் மகளிர் பாக்சிங் தங்கம்
8. ஜெய்ஸ்மைன் லம்போரியா மகளிர் பாக்சிங் தங்கம்
9. சாக்ஷி சவுதாரி மகளிர் பாக்சிங் தங்கம்
10. பிரியா கங்காஸ் மகளிர் பாக்சிங் தங்கம்
11. அருந்ததி சவுதாரி மகளிர் பாக்சிங் தங்கம்
12. சச்சின் சிவாச் ஆண்கள் பாக்சிங் தங்கம்
13. அங்குஷ் பாங்கல் ஆண்கள் பாக்சிங் தங்கம்
14. நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் வெள்ளி
15. முரளி ஸ்ரீசங்கர் ஆண்கள் நீளம் தாண்டுதல் வெள்ளி
16. பிரவீன் சித்ரவேல் ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் வெள்ளி
17. சர்வேஷ் குஷாரே ஆண்கள் உயரம் தாண்டுதல் வெள்ளி
18. குல்வீர் சிங் ஆண்கள் 10,000 மீ. ஓட்டம் வெள்ளி
19. ரிஷிகாந்தா சிங் ஆண்கள் பளுதூக்குதல் 60 கி. வெள்ளி
20. முத்துபாண்டி ராஜா ஆண்கள் பளுதூக்குதல் 65 கி. வெள்ளி
21. கியானேஷ்வரி மகளிர் பளுதூக்குதல் 53 கி. வெள்ளி
22. வல்லுரி பாபு ஆண்கள் பளுதூக்குதல் 79 கி. வெள்ளி
23. ஹர்ஜிந்தர் கவுர் மகளிர் பளுதூக்குதல் 69 கி. வெள்ளி
24. லவ்பிரீத் சிங் ஆண்கள் பளுதூக்குதல் +110 கி. வெள்ளி
25. லவ்லினா போர்கோஹைன் மகளிர் பாக்சிங் வெள்ளி
26. நரேந்தர் பெர்வால் ஆண்கள் பாக்சிங் 90+கி வெள்ளி
27. ஜடுமானி சிங் ஆண்கள் பாக்சிங் 55 கி. வெள்ளி
28. யாமினி மவுர்யா மகளிர் ஜூடோ 57 கி. வெள்ளி
29. முகமது பாசில் பாரா 100 மீ. ஓட்டம் T47 வெள்ளி
30. சுபம் ஜுயல் பாரா ஷாட் புட் F57 வெள்ளி
31. யஷ்வீர் சிங் பாரா ஆண்கள் ஈட்டி எறிதல் வெண்கலம்
32. செல்வ பிரபு ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் வெண்கலம்
33. குல்வீர் சிங் ஆண்கள் 5,000 மீ. ஓட்டம் வெண்கலம்
34. தேஜஸ்வின் சங்கர் ஆண்கள் டெகத்லான் வெண்கலம்
35. சீமா கலிரம்னா மகளிர் வட்டு எறிதல் வெண்கலம்
36. பிந்தியாராணி மகளிர் பளுதூக்குதல் 58 கி. வெண்கலம்
37. ஜாந்து குமார் பாரா பவர்லிப்டிங் வெண்கலம்
38. ஷில்பா ஷலா பாரா மகளிர் ஷாட்புட் வெண்கலம்
39. உன்னதி ஷர்மா மகளிர் ஜூடோ 64 கி. வெண்கலம்
