காயத்தால் விலகிய பும்ரா: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் கலே மைதானத்தில் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டிருந்த நிலையில் காயம் காரணமாக விலகி உள்ளார்.

முழங்கால் காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் 29 வயது அகிப் நபி முதன்முறையாக தேசிய அணியில் இடம்பிடிக்க உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2 ரஞ்சிக் கோப்பைத் தொடர்களில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நபி, ஜம்மு-காஷ்மீர் அணியின் ‘ரெட்-பால்’ வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர்.

புதிய பீல்டிங் பயிற்சியாளர்: இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி.திலீப்பின் ஒப்பந்த காலம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அவருக்கு பதிலாக புதிய பீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம், ரயில்வே அணிகளுக்காக ஆடி உள்ள இவர் 2021 முதல் 2023 வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

Related Stories: